Latestமலேசியா

Squishy எனும் மென்மையான பொம்மைகள் மீதான சோதனை: MC முத்திரை இல்லாத 2,300-க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல்

கோலா திரெங்கானு, அக்-14–உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் திரங்கானு பிரிவு, பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத சந்தேகத்தின் பேரில், 2,380 squishy மென்மையான பொம்மைகளைப் பறிமுதல் செய்துள்ளது. அவற்றின் மதிப்பு 30,391 ரிங்கிட் ஆகும். அக்டோபர் 3 முதல் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 101 சோதனைகளில் அவை கைப்பற்றப்பட்டதாக அதன் இயக்குநர் Mohd Mufsi Lat தெரிவித்தார்.

பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட அப்பொம்மைகளில், கட்டாயமாக இருக்க வேண்டிய மலேசிய அங்கீகாரம் முத்திரை (MC mark) இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதனை அடுத்து, கோலா திரங்கானுவில் உள்ள ஆறு வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பொம்மைப் பாதுகாப்புத் தர விதிமுறைகளின் கீழ் விசாரணை நடைபெறுவதாக Mohd Mufsi கூறினார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் பொம்மைகள், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்புத் தரநிலைகளைக் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு முதல் முறை தவறுக்கு 250,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். தனிநபர்களுக்கு 100,000 ரிங்கிட் வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!