
கோலாலம்பூர், அக்டோபர்-14,மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் உயர் அதிகாரி ஒருவர், 2017-ஆம் ஆண்டில் தனிநபர் ஒருவரிடமிருந்து 350,000 ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், போலீஸ் இரண்டு தனித்தனி விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
முதல் விசாரணை, குற்றவியல் சட்டத்தின் 165-ஆவது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டாவது விசாரணை, அவதூறு மற்றும் தகவல் தொடர்புச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பானது.
இவ்வேளையில், இந்த விவகாரம் 2018-ஆம் ஆண்டிலேயே விசாரிக்கப்பட்டதாகவும், குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கு அப்போது முடித்து வைக்கப்பட்டதாகவும் MACC தெரிவித்துள்ளது.
இருப்பினும், குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளதால், மறுவிசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெற்று வருவதால், பொது மக்கள் தேவையற்ற யூகங்களைத் தவிர்க்குமாறு டத்தோ குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.



