Latestமலேசியா

மலாய்க்கார முஸ்லீம்களைத் திருமணம் செய்தாலும் வெளிநாட்டினரின் இன அடையாளம் மாறாது; சைஃபுடின்

கோலாலம்பூர்- மலாய் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மலேசியரைத் திருமணம் செய்வதால், வெளிநாட்டவரின் இன அடையாளம் தானாகவே மலாய்க்காரராக மாறாது என உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நேற்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதில் தொடர்பாக வெளியான சில செய்தித் தலைப்புகள் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெளிவுபடுத்தினார்.

வெளிநாட்டவரின் இன அடையாளம் திருமணத்துக்குப் பிறகும் மாறாது என்றும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரின் இனத்தை தேசியப் பதிவுத் துறை—ஜேபிஎன்—தீர்மானிக்காது என்றும் அவர் கூறினார்.

தலைப்புகளை மட்டும் படித்துவிட்டுப் பகிர்வதைத் தவிர்த்து, தகவல்களின் பின்னணியையும் முழுமையாகச் சரிபார்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், மலாய் முஸ்லிமைத் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டு முஸ்லிம்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை மலாய்க்காரர்களாகவோ அல்லது வெளிநாட்டுப் பெற்றோரின் இன அடிப்படையிலோ பதிவு செய்யலாம் என சைஃபுதீன் குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாட்டவர் ஒருவர் மலாய் முஸ்லிமைத் திருமணம் செய்தால் பூமிபுத்ரா அந்தஸ்தையும் அதனுடன் தொடர்புடைய உரிமைகளையும் பெற முடியுமா என லாபிஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹொக் லியோங் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அரசியலமைப்பின்படி, ஒருவர் மலாய் இனத்தவராகக் கருதப்படுவதற்கு இஸ்லாமைப் பின்பற்றுதல், மலாய் மொழியை வழக்கமாகப் பேசுதல், மலாய் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. பிறப்பு அல்லது சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் கூட்டாட்சியில் வசித்தது தொடர்பான அரசியலமைப்பு நிபந்தனைகளும் இதில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!