
ஷா ஆலாம், அக்டோபர் 13 — வேறு மதத்தின் சடங்கில் ஈடுபட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தொடர்பாக, 21 வயதான அலிஃப் டேனியலைச் சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS) விசாரணைக்காகக் கைது செய்துள்ளது.
கோலாலம்பூரில் இன்று பிற்பகல் 1 மணியளவில், கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமயத் துறையின் (JAWI) அமலாக்க அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பின்னர், மேல் விசாரணைக்காக ஷா ஆலாமிலுள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா கட்டடத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருடன் 52 வயதான அவரது தாயாரும் கைது செய்யப்பட்டார்.
இருவரும் சிலாங்கூர் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக JAIS இயக்குநர் டத்தோ முகமட் ஷாஹிசான் அஹ்மட் (Dato’ Haji Mohd Shahzihan Ahmad) தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக குறைந்தது 14 பேரிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஷா ஆலாம் கீழ்நிலை நீதிமன்றம் பிறப்பித்த பரஸ்பர கைது ஆணையின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ, ஊகங்களை வெளியிடவோ வேண்டாம் என்றும், விசாரணையை முழுமையாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.



