Latestமலேசியா

STR கீழ் மரண சகாய நிதி பெர 60 வயதுக்குக் கீழ்பட்ட திருமணமாகாதோருக்கு தகுதியுண்டா? – நிதி அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர், மார்ச்-13 – SKK மரண சகாய நிதியானது, STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமூக உதவியாகும்.

2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை STR பெறுநர் அல்லது வாழ்க்கைத் துணைவர் மரணமடைந்தால், 1,000 ரிங்கிட் மரண சகாய நிதியாக வழங்கப்படும்.

குறுகிய காலத்தில் குடும்பத்தின் சுமைகளைக் குறைக்கும் நோக்கிலும், இறப்புக்கான செலவுகளைச் சமாளிக்கவும்  ஒரு முறை மட்டும் இந்நிதி வழங்கப்படுவதாக நிதி அமைச்சு விளக்கியது.

STR தரவுத் தளத்தில் பதியப்பட்டுள்ள இறந்தவரின் துணைவர் அல்லது தகுதியுள்ள வாரிசுத்தாரர், இந்த மரண சகாய நிதியை BSN வங்கிக் கிளைகளில் உரிய ஆவணங்களுடன் கோரலாம்.

STR உதவிப் பெறுநரில் 60 வயது மற்றும் அதற்குக் கீழ்பட்டவர்களும் இந்த SKK மரண சகாய நிதியைப் பெறத் தகுதியுடையவர்; ஆனால் குடும்ப பிரிவுப் பெறுநர் அல்லது துணைவர்களுக்கு மட்டுமே.

அதே சமயம், வாழ்க்கைத் துணையற்ற மூத்த குடிமக்களும் தகுதிப் பெறுவர் என, மேலவையில் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சு பதிலளித்தது.

STR கீழ் வழங்கப்படும் மரண சகாய நிதி, 60 வயதுக்குக் கீழ்பட்ட திருமணமாகாதோருக்கு ஏன் வழங்கப்படுவதில்லை என லிங்கேஷ் கேட்டிருந்தார்.

கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, SKK மரண சகாய நிதியாக 87 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் வழங்கப்பட்டது.

STR பெறுநர்களை உட்படுத்திய 71,000 மரணங்கள், அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களை சம்பந்தப்படுத்திய 16,000 மரணங்களுக்கு அந்நிதி ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே இவ்வாண்டு STR ரொக்க உதவி திருமணமாகாதவர்களுக்கு 500 ரிங்கிட்டிலிருந்து 600 ரிங்கிட்டுக்கு உயர்ந்துள்ளது.

இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் eKasih தரவின் கீழ் ஏழை மற்றும் பரம ஏழைகளாக பதிவுச் செய்திருந்தால் அவர்கள் SARA எனப்படும் ரஹ்மா அடிப்படை உதவியைப் பெறவும் தகுதியானவர்கள்; அதாவது ரொக்கமாக அல்லாமல் ஆண்டுக்கு 600 ரிங்கிட் அல்லது மாதம் 50 ரிங்கிட் அளவில் உதவிகளைப் பெற முடியும்.

ஆக, இவ்வாண்டு இவ்வர்கத்தினர் பெறப்போகும் உதவியின் மதிப்பு 1,200 ரிங்கிட்டாகும்.

திருமணமாகாதவர்களும் வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க அரசாங்கம் பரிவுடன் உதவுவதை இது காட்டுவதாக நிதி அமைச்சு கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!