Latestமலேசியா

அரிய நரம்பியல் நோயால் அவதியுறும் 1998 காமென்வெல்ட் போட்டியில் தங்கம் வென்ற ஜி.சரவணன்!

கோலாலம்பூர், ஏப்ரல்-18 – 1998 கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ மீட்டர் பெருநடைப் பிரிவில் தங்கம் வென்றவரான ஜி.சரவணன், MND எனப்படும் Motor Neurone Disease எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமன்வெல்த் போட்டி தவிர, 1995 சீ போட்டியில் வெண்கலம், 1997 மற்றும் 2001 சீ போட்டிகளில் தங்கப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார்.

ஆசியத் திடல் தடப் போட்டியிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தற்போது 55 வயதாகும் சரவணனுக்கு, 2021-ஆம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்ட நிலையில், வலிமை, நடமாட்டம் மற்றும் பேச்சு திறன் அவர் அதிகம் இழந்திருக்கிறார்.

79 கிலோவாக இருந்த அவரது உடல் எடையும் இப்போது 53 கிலோவாகக் குறைந்துள்ளது.

தசை பலவீனம் மற்றும் உடல் செயலிழப்பை ஏற்படுத்தும் அந்த அரிய நோயை குணப்படுத்த முடியாது என்பது வேதனையாகும்.

இந்நிலையில், சரவணனையும் அவரின் மனைவி சசிகலாவை வணக்கம் மலேசியா சந்தித்தது.

50 வயது வரை எந்தப் பிரச்னையுமின்றி ஆரோக்கியமாக வலம் வந்த தமக்கு இப்படியொரு நிலை ஏற்படுமென தாம் நினைக்கவில்லை என, சிரமத்திற்கிடையில் சரவணன் கூறினார்.

ஆரம்பத்தில், பக்கவாதமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில்தான் மருத்துவரிடம் சென்றோம்; ஆனால் நரம்பியல் சம்பந்தப்பட்ட MND நோய் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட போது ‘உலகமே இருண்டு போனது’ போல் இருந்தது.

சிகிச்சைக்காக 4 தடவை சென்னை சென்று வந்துள்ளோம்; அதற்காக 100,000 ரிங்கிட் வரை செலவாகியுள்ளது; ஆனால், இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என மருத்துவர்கள் கூறியதாக சசிகலா சொன்னார்.

பிசியோ சிகிச்சைக்குப் போகும் இடத்தில் 2 வாரங்களுக்கு ஒரு முறைதான் இடம் கிடைக்கிறது; ஆனால் சரவணன் இருக்கும் நிலைக்கு, அவர் தினசரி செல்ல வேண்டும்.

இதுநாள் வரை YAKEB எனப்படும் தேசிய விளையாட்டாளர்கள் நல அறவாரியம் உதவி செய்து வந்தது.
இப்போது Yayasan Pemerkasaan Pendidikan dan Kemahiran உதவியுடன், PPUM மருத்துவ மையத்தில் சரவணன் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், தனக்கு நேர்ந்த நிலைமை வராதிருக்க, இன்றைய விளையாட்டாளர்கள் சரியான உணவு முறை, வைட்டமின் ஊட்டச் சத்துகள், மற்றும் தரமான வாழ்க்கையை வாழ வேண்டுமென, வரும் தலைமுறையினருக்கு ஆலோசனை கூறுகிறார் சரவணன்.

பெருநடைக் களத்தில் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்த்த சரவணனின் தொடர் சிகிச்சைக்கு நிதி ஆதரவுத் தேவை.

இந்த இக்கட்டானச் சூழலைச் சமாளிக்க நாமும் நம்மால் ஆனதை செய்து உதவலாமே.

நன்கொடை வழங்க விரும்புவோர், Yayasan Pemerkasaan Pendidikan dan Kemahiran என்ற பெயரில், ‘Saravanan Aid’ என குறிப்பிட்டு, Maybank Islamic வங்கிக் கணக்கான 5622 0962 7619 என்ற எண்களில் அதனை வழங்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!