
சிக்காக்கோ, மார்ச்-12 – கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட தனது விமானங்களில் ஒன்று கழிப்பறை பிரச்சனையால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதை, ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகளின் செயல்களால் பிளாஸ்டிக் பைகளும் கந்தல் துணிகளும் ஆடைகளும் கழிப்பறைகளில் அடைத்துக்கொண்டன.
இதனால் இந்தியத் தலைநகர் புது டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த விமானம், சில மணி நேரங்களாக வானிலேயே வட்டமடித்து விட்டு சிக்காக்கோ திரும்பியது.
புறப்பட்ட சுமார் 2 மணி நேரங்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியவில்லை என பயணிகள் புகார் கூறினர்; உடனடியாக பரிசோதித்ததில் 12 கழிவறைகளில், 8 கழிவறைகள் பழுதடைந்திருந்தன.
அப்போதுதான் இந்த பிளாஸ்டிக் பைகளும் கந்தல் துணிகளும் கழிப்பிடக் குழாய்களில் அடைத்துக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
கழிவறையைப் பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.
இதனால் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானத்தை சிக்காக்கோவுக்கே திருப்ப முடிவெடுக்கப்பட்டது.
தரையிறங்கியதும், பயணிகளுக்குத் தங்குமிட வசதி மற்றும் டெல்லிக்கு தங்கள் பயணத்தைத் தொடர மாற்று விமான ஏற்பாடு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக ஏர் இந்தியா கூறியது.
அடைத்துக் கொண்ட கழிவுகளைக் காட்டும் சில புகைப்படங்களையும் அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது.
இச்சம்பவமானது விமான கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் இந்தியர்களின் ‘பண்பை’ வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாக இந்திய வலைத்தளங்களில் சூடான விவாதம் எழுந்துள்ளது.