
மெர்போக், மார்ச்-26-கெடா, மெர்போக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்போங் பெலாவில் (Kampung Belau) 65 வயது கணவர், 53 வயது மனைவி என இருவரின் உடல்கள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கம்பளத்தில் சுருட்டப்பட்டு, சமையலறையில் கண்டெடுக்கப்பட்டன.
அவர்களின் 29 வயது மகன், வீட்டில் மேல்தளத்தில், கழுத்தில் ஆழமான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
3 நாட்களாக அக்குடும்பத்தினரை வெளியில் காணவில்லை என்றும், வீட்டில் துர்நாற்றம் வீசுவதாகவும் அண்டை வீட்டார் முன்னதாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
போலீஸ் வந்து பார்த்தபோது, வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது, இருண்ட நிலையில், கடும் துர்நாற்றமும் வீசியது.
வரவேற்பறையில் ஒன்றும் பாதியுமாக இரத்தக் கறைகள் துடைக்கப்பட்ட தடயங்களும் காணப்பட்டன.
சம்பவ இடத்தில் பல கூர்மையான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடக்கக் கட்ட விசாரணையில், மகன், பெற்றோரை கொன்று, பின்னர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
மகனுக்கு ஏற்கனவே மனநல பிரச்னை இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த பயங்கர சம்பவம், உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



