
குவாலா லங்காட், ஏப்ரல்-19-சிலாங்கூர், தெலுக் பங்லிமா காராங்கில் உணவமொன்றில் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடைய நபர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சில ஆடவர்கள் பண்டார் ரிம்பாயுவில் உள்ள அந்த உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் பொருட்களைச் சேதப்படுத்தி, ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இது குறித்துக் கருத்துரைத்த குவாலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் Ahmad Ridhwan Mohd Nor, உணவக உரிமையாளர் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.
வாடிக்கையாளர் ஒருவர் உணவகத்தில் சிகரெட் பிடித்ததால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட ஒரு சிறு புரிந்துணர்வின்மையே இந்த மோதலுக்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் யாருக்கும் பெரியக் காயம் ஏற்படவில்லை என்றாலும், போலீஸார் வருவதற்குள் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து கலவரத்தில் இறங்கியதாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாகப் போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்னதாக, அவ்வுணவகத்தில் இரு ஆடவர்கள் சண்டையிட்டுக் கொள்வதும், அவர்களை விலக்கி விட மற்றவர்கள் முயலுவதும் வைரலான 47 வினாடி வீடியோவில் தெரிந்தது.



