Latestமலேசியா

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவின் பிளக் மலேசியாவில் உற்பத்தி செய்யப்பட்டது

கோலாலம்பூர், ஜன 19 – அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் 1282 போயிங் 737 MAX 9 விமானம் பறந்துகொண்டிருந்தபோது வெடித்து சிதறிய அந்த விமானத்தின் கதவின் பிளக் (Plug) மலேசியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மன்றம் உறுதிப்படுத்தியது. கன்சாஸ், விச்சித்தாவிலுள்ள போயிங் விமான விநியோகிப்பாளருக்கு சென்றடைவதற்கு முன் மலேசியாவிலுள்ள “Spirit AeroSystems” நிறுவனத்தில் அது உற்பத்தி செய்யப்பட்டதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கழகத்தின் தலைவர் ஜெனிபர் ஹோமண்டி தெரிவித்திருக்கிறார். அங்கிருந்து வாஷிங்டன் ரெண்டனிலுள்ள போயிங் விமானம் உற்பத்தி நிலையத்திற்கு அந்த கதவின் பிளக் பகுதி அனுப்பி வைக்கப்பட்டதாக “Wall Street Journal” செய்தி வெளியிட்டது. அந்த கதவை பொருத்தும் பிளக் எப்படி தயாரிக்கப்பட்டு ,அனுப்பிவைக்கப்பட்டு மற்றும் அது பொருத்தப்பட்டது என்பது குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மன்றம் ஆராய்ந்து வருவதாக ஜெனிபர் ஹோமண்டி தெரிவித்தார். மேலும் அந்த கதவு தொடர்பான பாதுகாப்பின் தரம் குறித்தும் ஆராயப்படும் என அவர் கூறினார்.

இந்த செயல்பாட்டில் எங்கு என்ன நடந்தது என்பதற்கான எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லையென அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை செனட் வர்த்தகக் குழு உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல செனட்டர்கள், விசாரணை மூலம் காரணத்தை அடையாளம் காணும் வரை ஜெட் விமானங்கள் தரையிறக்க வேண்டியிருக்கும் என்று கூறினார். அமெரிக்க செனட் வர்த்தக குழுவின் தலைவர் மரியா கான்ட்வில் , போயிங் தயாரிப்பில் கூட்டரசு விமான நிர்வாகத்தின் மேற்பார்வையை ஆய்வு செய்ய ஒரு விசாரணை நடைபெறக்கூடும் என தெரிவித்தார். இதற்கிடையே டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸ் , எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார், ஆனால் இந்த குறிப்பிட்ட சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மையையும் அவர் வெளிப்படுத்தினார். முன்னதாக ஜனவரி 12 ஆம் தேதி, அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட விமானத்தின் கதவின் பிளக் வெடித்து சிதறியது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். இருப்பினும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் முறையான அறிக்கையை சமர்ப்பித்தால், மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இதனை கவனிக்கும் என அந்தோனி லோக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!