
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில் விவகாரத்தில் ஒரு வழியாக சுமூகத் தீர்வு கிடைத்துள்ளது.
நல்லிணக்க முறையில் இடமாற்றம் செய்யப்படுமென்ற அறிவிப்பை அனைவரும் வரவேற்க வேண்டுமென, DAP உதவித் தலைவர் J. அருள்குமார் கூறியுள்ளார்.
நிலம் தொடர்பான பிரச்சனை எழுந்ததிலிருந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மத்திய அரசு மற்றும் DBKL உள்ளிட்ட தரப்புகள், இந்த கோயிலை இடமாற்றம் செய்வதில் ஒருமித்த தீர்வு எட்டப்படும் வரை, கோயில் இடிக்கப்படாது என்று உறுதியளித்தனர்.
அதற்கேற்ப, அதே மஸ்ஜிட் இந்தியா பகுதியில் 4,000 சதுர அடி பரப்பளவில், தற்போதுள்ள கோயிலிலிருந்து 50 மீட்டர் தூரம் கொண்ட ஒரு நிலம் புதிய கோயிலைக் கட்டுவதற்குக் கிடைத்துள்ளது.
மிக முக்கியமாக, அரசாங்கம் நிரந்தர நிலப்பாட்டா வழங்கும் என்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஓர் உணர்ச்சிப்பூர்வமான விவகாரத்தில், இது ஒரு சரியான தீர்வு என, நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அருள்குமார் வருணித்தார்.
கோயில் நிர்வாகத்துடன் இந்த இடமாற்றம் குறித்து உடன்பாட்டை எட்டுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்த டிஜிட்டல் அமைச்சர், கோபிந்த் சிங் டியோ, கூட்டரசுப் பிரதேச அமைச்சர், துணை அமைச்சர்கள், மாநகர மேயர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அருள்குமார் கூறினார்.
கோவிலின் பெயரிலே இந்த நிலப்பட்டா பதிவுச் செய்யப்படுவதன் மூலம், கோயிலின் நிலை குறித்து இனி எவரும் கேள்வி எழுப்ப வாய்ப்பில்லை.
என்றாலும், இதற்கு முன் இந்த ஆலய நிலத்தில் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, புதிய நிலம் ஆலயத்தின் பெயரில் உடனடியாக அதிகாரப்பூர்வமாக பதிவுச் செய்யப்பட வேண்டுமென அருள் வலியுறுத்தினார்.
இது போன்ற முக்கியமான பிரச்சனைகளை, மலேசிய சமூகத்தின் ஒற்றுமையைப் பிளவுப்படுத்தாத வகையில் கவனமாகக் கையாள வேண்டும்.
கோயில் பிரச்னைக்குத் தீர்வுக் கிடைத்திருப்பதால், ஒன்றுபட்ட மலேசிய சமுதாயத்தை முன்னேறுவதற்கான செயல் திட்டங்களில் இனி ஈடுபடுவோம் என அருள் அறைக்கூவல் விடுத்தார்.