
கோலாலம்பூர், செப்டம்பர் -21 – தலைநகர் Jalan Gombak-கில் மோட்டார் சைக்கிள் ரோந்து போலீஸ்காரரை மோதி விட்டு தப்பியோடிய ஆடம்பர காரோட்டி தேடப்படுகிறார்.
அவ்வாடவர் இன்னும் தானாக முன்வந்து புகார் செய்யாமலிருப்பதாக, கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் கூறியது.
இதையடுத்து அவரை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கார் பதிவின் போது கொடுக்கப்பட்ட விவரங்களைப் பார்த்தால் தப்பியோடியவர் ஜோகூர், பூலாயைச் சேர்ந்தவர்.
ஆனால் அந்த முகவரிக்குச் சென்றுப் பார்த்தால் வீடு காலியாக இருப்பதாக போலீஸ் கூறிற்று.
அந்த வெள்ளை நிற ஆடம்பரக் கார் திடீரென வலதுப் புறம் திரும்பியதால், பின்னால் வந்த அந்த ரோந்து போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் அதனுடன் மோதி சாலையில் விழுவதும், கார் நிற்காமல் ஓட்டம் பிடிப்பதும், வைரலான 44 வினாடி வீடியோவில் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட போலீஸ்காரருக்கு கைமுட்டியில் காயமேற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.