
கோலாலம்பூர், செப் -22,
Budi Madani RON95 (BUDI95) திட்டம் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க வசதியாக, செப்டம்பர் 27 ஆம்தேதி முதல் அக்டோபர் 26 ஆம் தேதிவரை நாடு முழுவதும் வார இறுதி நாட்களில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அதன் நடவடிக்கை நேரத்தைத் நீட்டிக்கும்.
மக்கள், குறிப்பாக தனிநபர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்காக, அதன் செயல்பாடு அல்லது நடவடிக்கை நேரத்தை நீட்டிப்பதாக JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் எடி பாட்லி ரம்லி ( Aedy Fadly Ramli ) தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிம முகப்பிடங்கள் மற்றும் இதர முகப்பிடங்கள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனைத்து மாநில JPJ மற்றும் அதன் கிளைகளிலும் திறந்திருக்கும்.
16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசிய பிரஜைகள் வாகன ஓட்டும் லைசென்ஸ் வைத்திருந்தால் செப்டம்பர் 30 ஆம்தேதி முதல் RON95 பெட்ரோலை ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னுக்கு வாங்க முடியும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலையில் அறிவித்திருந்தார்.
BUDI95 திட்டத்தின் கீழ் My kad பயன்படுத்தி இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு RON95 பெட்ரோலை ஒவ்வொரு மலேசியரும் 300 லிட்டருக்கு வாங்க முடியும்.



