Latestமலேசியா

கம்போங் ஊஜோங் பத்து அசல் குடியேற்றக்காரர்களுக்கு இலவச மாற்று வீடுகள்; டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ அறிவிப்பு

பாகான், டிசம்பர்-9, பினாங்கு, பாகான் டாலாம், கம்போங் ஊஜோங் பத்துவின் மறு மேம்பாட்டுத் திட்டத்தில், அதன் ஆரம்ப குடியிருப்பாளர்கள் 268 பேர், 750 அதுர அடியில், அதிகபட்சம் 100,000 ரிங்கிட் விலையிலான வீடுகளை இலவசமாகப் பெறத் தகுதிப் பெற்றுள்ளனர்.

வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ அதனைத் தெரிவித்தார்.

ஊஜோங் பத்து மக்களுடனான நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.

மறுகுடியேற்றத் திட்டம் குறித்து நம்பிக்கையூட்டும் வகையில், இழப்பீட்டு வீடுகளைப் பெறுவதற்குத் தகுதியான அந்த 268 கிராம மக்களுக்கும், மாநில அரசு Letter of Intent (LoI) எனப்படும் விருப்பக் கடிதங்களை வழங்கியுள்ளது.

நேற்றையக் கலந்தாய்வில், ஓர் அடையாள அங்கமாக அவர்களில் 30 பேருக்கு மேடையில் அக்கடிதங்கள் ஒப்படைக்கப்பட்ட வேளை, மற்றவர்களுக்கு நிகழ்ச்சிக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்டதாக டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ கூறினார்.

கம்போங் ஊஜோங் பத்து மறு மேம்பாட்டுத் திட்டம் Jalan Bagan Dalam, Jalan Assumption ஆகிய இரு முக்கியச் சாலைகளுக்கு அருகே அமைந்துள்ளது.

தவிர, BORR எனப்படும் பட்டவொர்த் வெளிவட்ட சாலையையும் இணைக்கிறது.

இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த மேம்பாட்டுத் திட்டம் பத்தாண்டுகளில் முழுமைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தகுதிப் பெற்றவர்களுக்கு மாற்று வீடுகளை உள்ளடக்கிய முதல் கட்ட மேம்பாடு 2029-ல் நிறைவுபெறுமென டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சொன்னார்.

இரண்டாம் கட்ட மேம்பாடு கடை வீடுகள், வணிக வளாகங்கள், கார் நிறுத்துமிடங்கள், மக்களுக்கான வசதி கட்டமைப்பு உள்ளிட்டவற்றை உட்படுத்தியிருக்கும்.

பினாங்கு மாநில வீடமைப்பு வாரியம் ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்வில், பாகான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங்கும் கலந்துகொண்டு, LoI கடிதங்களை எடுத்து வழங்கினார்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் கே.குமரன் உள்ளிட்டோரும் அக்கலந்தாய்வில் பங்கேற்றனர்.

அரசாங்க நிலத்தில் 15.23 ஏக்கர் நிலப்பரப்பில் 340 இருப்பிடங்களையும் இன்னபிற கட்டுமானங்களையும் கொண்ட இந்த கம்போங் ஊஜோங் பத்து விவகாரம் நீண்ட கால பிரச்னையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!