
செந்தூல், ஜூன்-13-கோலாலம்பூர், ஜின்ஜாங் உத்தாராவில் கடன் வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை மோதலில் தொடர்புடைய 13 உள்ளூர் ஆடவர்கள் செந்தூல் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
18 முதல் 51 வயதுக்குட்பட்ட இந்தச் சந்தேக நபர்கள், சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பிடிபட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.
கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lim Lip Eng இணையத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட்டி முதலைகள் எனச் சந்தேகிக்கப்படும் கும்பல் ஒன்று, ஓர் ஆடவரைத் துரத்திச் சென்று, அவர் கீழே விழுந்ததும் தடிகளால் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.
கைதுச் செய்யப்பட்டவர்களில் சிலருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பின்னணிப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது அனைத்து சந்தேக நபர்களும் 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வேளை, ஆயுதமேந்திய கலவரம் மற்றும் ஆபத்தான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய பிரிவுகளின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



