
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 19 – அண்மையில் தேசியக் கொடியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் பொய்யான தகவல்களை வெளியிட்டதற்காகவும் சின் சியூ (Sin Chew) மற்றும் சினார் ஹரியான் (Sinar Harian) நிறுவனங்களுக்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) 100,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
Sin Chew தனது டிஜிட்டல் பத்திரிகையில் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங் (Jalur Gemilang) படத்தை வெளியிட்டதால் அபராதம் விதிக்கப்பட்டது.
அதே வேளை, சினார் ஹரியான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீஸ் தலைமை இயக்குநர் காலீட் இஸ்மாயில் (Khalid Ismail) உள்ளூர் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர் என்ற பொய்யான தகவலைப் பதிவேற்றியதற்காக தண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜாலூர் கெமிலாங் நாட்டின் அதிகாரம், ஒற்றுமை மற்றும் மரியாதையின் சின்னமாக இருப்பதால் எப்போதும் துல்லியமாக காட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், இத்தகைய பொய்யான தகவல்கள் பொதுமக்களின் ஒழுங்கை பாதித்து, அதிகாரிகள் மீதான நம்பிக்கையை சிதைக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இவ்விரண்டு வழக்குகளும் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, அதே சட்டத்தின் அடிப்படையில் அபராதங்கள் விதிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.