
சுபாங் ஜெயா, ஏப் 3 – புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீவிபத்தில்
பாதிக்கப்பட்டவர்களின் வாகன ஓட்டும் லைசென்ஸ் உட்பட பல்வேறு ஆவணங்களை இலவசமாக வழங்க சாலை போக்குவரத்துத்துறை முன்வந்துள்ளது. வாகனமோட்டுவதற்கான மாற்று லைசென்ஸ், சாலை வரி மற்றும் வாகன உரிம பதிவுப் பத்திரம் ஆகியவற்றையும் இலவசமாக ஜே.பி.ஜே ஏற்பாடு செய்யும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். இந்த முன்முயற்சியானது பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதி கோரிக்கைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் ஜே.பி.ஜே சேவையைப் பெறுவதற்கு போலீஸ் புகார் அறிக்கை எதுவும் தேவையில்லையென அந்தோனி லோக் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பெயர் மற்றும் அடையாளக் கார்டு எண்களை மட்டும் தெரிவித்தால் சாலை போக்குவரத்து துறை தொடர்பான வாகன லைசென்ஸ், சாலை வரி மற்றும் வாகன உரிமை பதிவுப் பத்திரம் போன்றவை மீண்டும் இலவசமாக வழங்கப்படும். இன்று தொடங்கி நாளைவரை இந்த சேவை நடைபெறும். தேவைப்பட்டால் இந்த சேவை நீட்டிக்கப்படும் என புத்ரா ஹைட்ஸ் தீவிபத்தில் பாதிக்கக்கப்பட்டவர்களை புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அந்தோனி லோக் தெரிவித்தார். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக பயன்படுத்துவதற்காக 30 வாகனங்களை வழங்குவதற்கு கார் விற்பனை நிறுவனமான Carro முன்வந்துள்ள தகவலையும் அவர் வெளியிட்டார். அதோடு பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக பயன்படுத்துவற்காக இலவசமாக 70 மோட்டார்சைக்கிள்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் போக்குவரத்து அமைச்சு பேச்சு பேச்சு நடத்தி வருகிறது. வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தற்காலிகமாக தேவைப்படுவோர் குறித்த விரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Ng Sze Han ஈடுபட்டுவருகிறார். இதன் வழி மொத்தம் எத்தனை பேருக்கு வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் தேவை என்பதை கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்து ஏற்பாட்டுக்கான வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பெற்றுத் தருவதது தொடர்பில் நாங்கள் மேலும் பல நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி வருகிறோம் என அவர் கூறினார். இதனிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்கொடையாக பெர்ஜெயா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ வின்சென்ட் டான் 3,000 ரிங்கிட் வழங்க முன்வந்துள்ளார் என்றும் அந்தோனி லோக் தெரிவத்தார்.