
புத்ரா ஜெயா, அக்டோபர்- 17,
பகடிவதை சம்பவங்கள் சிறிதாக கருதப்பட்டாலும்கூட அவற்றை ஒருபோதும் பாதுகாக்க வேண்டாம் என பள்ளிகளுக்கும் பெற்றோர் – ஆசிரியர் சங்கத்திற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் குற்றச்செயல்களை பாதுகாப்பதற்கு ஒப்பானதாகும் என அவர் நினைவுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நற்பெயரைப் பாதுகாக்க விரும்புவதாகக் கூறி பகடிவதை சம்பவங்களை மறைக்க முயற்சிக்கும் ஒரு சில பள்ளி நிர்வாகிகளின் அணுகுமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது நிலைமையை மோசமாக்கிவிடும்.
தலைமையரிசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விவகாரத்தில் அவசியம் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்.பள்ளியின் நற்பெயரைப் பாதுகாக்க விரும்பும் பள்ளி நிர்வாகிகளின் தவறான புரிதல் அல்லது பள்ளிக்கு அவர்கள் முன்னுரிமை வழங்குவதுதான் முக்கிய பிரச்னையாகும் . பகடிவதை பள்ளியில் நடந்திருந்தால் பள்ளியின் நற்பெயரை காப்பாற்றுவதற்காக அவர்கள் அதனை வெளியே தெரிவிக்காமல் மூடி மறைக்கின்றனர். அதே வேளையில் இந்த சம்பவத்தை மூடி மறைப்பது ஒரு குற்றம் என்பதோடு அது குற்றத்தை மறைப்பதற்கு ஒப்பானதாகும் என இன்று பிரிசின்ட் 5 இல் Jannatul Firadaus தொழுகை மையத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொண்டபோது அன்வார் தெரிவித்தார். பகடிவதை விவகாரத்திற்கு தொடக்கத்திலேயே தீர்வு காணாவிட்டால் அது பெரிய சிக்கலாகிவிடும். முதலில் இந்த விவகாரம் சிறிதாக இருக்கும். அப்போதே நடவடிக்கை எடுக்காவிட்டால் பிறகு பெரிய விவகாரமாகிவிடும் என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் விவேகமாக இருக்க வேண்டும் என அன்வார் நினைவுறுத்தினார். மேலும் சமூக ஊடகங்கள் உட்பட குற்றங்கள் தொடர்பான விவகாரங்களில் அதிக நேரம் காத்திருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.