
பாலேக் பூலாவ் , டிச 2 – நைஜீரிய பெண் ஒருவரை வீட்டு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கி அவரை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி வற்புறுத்திய ஒரு தம்பதியர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். பாயன் லெப்பாஸிலுள்ள ஒரு வீட்டிலிருந்து 25 வயதுடைய அந்த பெண் தப்பிச் சென்று போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் அம்பலத்திற்கு வந்தது. கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் பினாங்கு தென் மேற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் குழு அந்த வீட்டைச் சோதனையிட்டதாக துணை கமிஷனர் சசாலி ஆடம் ( Sazalee Adam) தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மனிதக் கடத்தல் மற்றும் குடியேறிகள் கடத்தல் கும்பல் என சந்தேகிக்கப்படும் நான்கு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். 24 மற்றும் 37 வயதுடைய அவர்களில் ஒருவர் உள்நாட்டுப் பெண் ஆவார்.
வீட்டு வேலை இருப்பதாக நைஜீரியாவைச் சேர்ந்த மற்றொரு பெண் கூறியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அக்டோபர் 10 ஆம்தேதி KLIA விமான நிலையம் வந்தடைந்த பின் அவரை முகவர் ஒருவர் பினாங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்ததாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சசாலி தெரிவித்தார். அந்த பெண் கோலாலம்பூருக்கு சென்று போலீஸ் புகார் செய்வதற்கு முன் தூதரகத்தின் உதவியை நாடியுள்ளார் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் சஷாலி தெரிவித்தார்.