
கோலாலம்பூர், நவம்பர்-21, அண்மையில் 5 நாடுகளுக்கு பிரதமர் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணங்களுக்கான செலவுகளில் 70 முதல் 80 விழுக்காட்டை, அதே பயணங்களில் பங்கெடுத்த தனியார் நிறுவனங்களே ஏற்றுக் கொண்டன.
வெளிநாட்டு அலுவல் பயணங்களுக்கானச் செலவுகள் முடிந்தவரை விவேகமாக நிர்வகிக்கப்படுவதை உறுதிச் செய்யும் தமதரசாங்கத்தின் அணுகுமுறைக்கு ஏற்ப அது அமைவதாக, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பயணச் செலவை ஏற்றுக் கொண்ட நிறுவனங்களுக்கு, இந்நாட்டில் வர்த்தக மற்றும் முதலீட்டு நலன்கள் இருப்பதாக அவர் சொன்னார்.
பெட்ரோனாஸ், சப்புரா எனர்ஜி, இன்சோன், புரோட்டோன் போன்ற அந்நிறுவனங்களையும் உடன் அழைத்துச் செல்லும் இப்புதிய முறையின் கீழ், அவை பயணச் செலவை ஏற்றுக் கொள்கின்றன; அரசாங்கம் இறக்குமதி ஏற்றுமதியில் அவற்றுக்கு உதவுகிறது.
மக்களவையில் பிரதமருக்கான இன்றைய கேள்வி நேரத்தின் போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
இரு வழி உறவுகளை மேம்படுத்தவும், தலைவர்களின் உச்சநிலை மாநாடுகளில் பங்கேற்கவும் ஏதுவாக இந்த நவம்பர் மாதத்தில் மட்டும், சீனா, எகிப்து, சவூதி அரேபியா, பெரு, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.