ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்ய தேசியப் பள்ளிகளில் தமிழ்-சீன மொழிகள்; பாஸ் கட்சி பரிந்துரை

சுங்கை பட்டாணி, செப்டம்பர்-14,
இன ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாக தேசியப் பள்ளிகளில் தமிழ் மற்றும் மாண்டரின் மொழிகளை அறிமுகப்படுத்த வேண்டுமென, பாஸ் கட்சி பரிந்துரைத்துள்ளது.
கெடா, சுங்கை பட்டாணியில் நடைபெற்ற பாஸ் ஆதரவாளர் மன்றத்தின் மாநாட்டில் பேசிய போது கட்சித் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் அதனை முன்மொழிந்தார்.
மொழித் தடைகள் சமூகங்களுக்கு இடையே சந்தேகத்தை உருவாக்குகின்றன; எனவே அடுத்தவர் மொழிகளை கற்றுக்கொள்வது பல்லின மக்கள் மத்தியில் நல்ல புரிதலை வளர்க்கும் என்றார் அவர்.
அதே நேரத்தில், மலாய் மொழியை தேசிய மொழியாக வலுப்படுத்த வேண்டும் என்றும், மலேசியர்கள் தேசிய கீதம் அல்லது அடிப்படை மலாயை புரியாத நிலைக்கு சென்று விடக்கூடாது என்றும் துவான் இப்ராஹிம் எச்சரித்தார்.
இவ்வேளையில் பாஸ் அல்லது பெரிகாத்தான் நேஷனல் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமிய சட்டங்களை திணிக்கப்படும் என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.
மத சுதந்திரத்தை நாங்கள் நிச்சயமாக மதிப்போம் என அவர் உறுதியளித்தார்.
மேலும், சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகள் தொடர வேண்டும் என்றும், மொழி என்பது கலாச்சார அடையாளத்தின் முக்கிய அங்கம் என்றும் அவர் கூறினார்.
தற்போது 68,000 ஆக உள்ள பாஸ் ஆதரவாளர் பிரிவு உறுப்பினர்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், ஒருநாள் நாராளுமன்றத்தில் அவர்களே எம்.பிக்களாக வருவது கூட சாத்தியமே என்றும் துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.