
மணிலா, ஆகஸ்ட்-14 – மலேசிய – பிலிப்பின்ஸ் கடற்படைகளுக்கு இடையில் மோதல் சூழ்நிலை உருவாகியிருப்பது போன்ற தோரணையில் YouTube-பில் ஒரு வீடியோ பரவியிருப்பதை, மணிலா மறுத்திருக்கின்றது.
மலேசியக் கடற்படையுடன் பிலிப்பின்ஸ் கடற்படைக் கப்பல் மல்லுக்கு நிற்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.
அது வெறும் கட்டுக்கதையென, பிலிப்பின்ஸ் ஆயுதப்படை அறிக்கையொன்றில் விளக்கியது.
மலேசியாவுடனான 60 ஆண்டு கால நல்லுறவைக் கெடுப்பதோடு, பிலிப்பின்ஸ் இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவே இந்த பொய் வீடியோ பரப்பப்பட்டுள்ளது.
இது போன்ற செயல்களால் வட்டார அமைதி சீர்குலைவதோடு குறிப்பிட்ட தரப்புகளுக்கு அரசியல் ஆதாயமும் கிடைப்பதாக அவ்வறிக்கை மேலும் கூறியது.
பிராந்திய உரிமைக் கோரல் தொடர்பில் தென் சீனக் கடலில் இரு நாட்டு கடற்படைகளும் மல்லுக்கு நிற்பதாக, 12 நிமிட வீடியோ முன்னதாக YouTube-பில் பதிவேற்றப்பட்டு வைரலானது.