
கோலாலம்பூர், பிப்ரவரி-1 – நாட்டில் குறைந்தது பத்து குழந்தைகளில் ஒரு குழந்தையாவது மோசமான கண் பார்வை பிரச்சினையை எதிர்கொள்கிறது.
இது பள்ளியில் கற்றலை மட்டுமல்ல, குழந்தைகளின் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகளையும் பாதிக்கிறது.
ஆரம்பத்திலேயே கண்டறியா விட்டால், கண் பார்வையே பறிபோகும் அபாயத்திற்கு அது இட்டுச் சென்று விடுமென மருத்துவர்கள் பெற்றோர்களை எச்சரிக்கின்றனர்.
மாணவர்களிடையே கிட்டப்பார்வை பிரச்சினைகள் பரம்பரை மற்றும் மரபியல் காரணமாக ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் வாழ்க்கை முறையே அதற்கு முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.
இங்கு தான் பெற்றோர்கள் கோட்டை விட்டு விடுவதாக பிரபல குழந்தைக் கண் மருத்துவர் Dr. Norazah Abdul Rahman கூறுகிறார்.
பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கைப்பேசி, tablet போன்ற கையடக்க தொடர்பு சாதனங்களைப் பழக்கி விட்டுள்ளனர்.
குழந்தைகளிடம் அக்கருவிகளைக் கொடுத்தால் அமைதியாகி விடுவார்கள் என நினைத்து, அவர்கள் அழும் போதெல்லாமோ அல்லது தாங்கள் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்கும் போதோ பெற்றோர்கள் உடனே கேஜெட்டுகளை நீட்டி விடுகின்றனர்.
நீண்ட நேரம் அடிக்கடி கையடக்க தொடர்பு சாதனங்களை நெருக்கமாகப் பயன்படுத்துவதால், 5 வயதிலேயே குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என Dr Norazah, Buletin tv3-விடம் சுட்டிக் காட்டினார்.
இது குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும்; நிலைமை கை மீறும் போது, குழந்தைகள் இளம் வயதிலேயே பார்வையற்றவர்களாக மாறும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் பிரச்சனையைத் தடுக்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நான்கு வயதிலிருந்தே வழக்கமான கண் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அதே சமயம் குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரங்களாவது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
அதை விடுத்து, எப்போது பார்த்தாலும் வீட்டுக்குள்ளேயே குழந்தைகளிடம் கையடக்கக் கருவிகளை நீட்டி அவற்றை ‘டிஜிட்டல் குழந்தை பராமரிப்பாளராக்கி’ விடாதீர்கள் என கண் மருத்துவர்கள் பெற்றோர்களை எச்சரிக்கின்றனர்.