
செந்தோசா, மார்ச்-5 – சில தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுக் குழுக்களிலிருந்து நீக்கப்படலாம் என APHM எனப்படும் தனியார் மருத்துவமனைகள் சங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறித்து, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் கவலைத் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையானது, சரியான நேரத்தில் சிகிச்சைக்காக தனியார் சுகாதாரப் பராமரிப்பு மையங்களை நம்பியிருக்கும் காப்பீட்டுத்தாரர்களைப் பாதிக்கலாம்.
இந்நிலை, நிதிக் கவலைகள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; பொது சுகாதாரம் மற்றும் பயனீட்டாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்டதென குணராஜ் சொன்னார்.
அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், ஏராளமான மலேசியர்கள் மாற்றுத் தேர்வாக தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.
இப்படி ஒரு சூழ்நிலையில், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் காப்பீட்டுக் குழுவிலிருந்து நீக்கப்பட்டால், காப்பீட்டுத்தாரர்களுக்குக் குறைந்த தேர்வுகளே எஞ்சியிருக்கும்.
இதனால், எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதோடு முறையான பராமரிப்பைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்பதை குணராஜ் சுட்டிக் காட்டினார்.
எனவே, மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் பொறுப்புணர்வை இருப்பதை உறுதிச் செய்ய ஏதுவாக, தெளிவான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துமாறு APHM-மை குணராஜ் வலியுறுத்தினார்.
உயர்தர பராமரிப்பைப் உறுதிச் செய்யும் அதே வேளையில், செலவின அதிகரிப்பைத் தடுக்க நியாயமான மற்றும் வெளிப்படையான விலையை நிர்ணயத்தல், தொடர்ச்சியான காப்பீட்டை உறுதி செய்தல், நோயாளி பராமரிப்பில் சமரசம் செய்யாமல் இணக்கப் போக்கை எட்டுவதும் அவற்றிலடங்கும் என்றார் அவர்.
நோயாளிகளின் சிகிச்சைக் கட்டணங்களில் கணிசமான தள்ளுபடிகளுக்கான காப்பீட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாத காரணத்தால், APHM-மில் உறுப்பியம் பெற்றுள்ள பல மருத்துவமனைகள் காப்பீட்டுக் குழுவிலிருந்து நீக்கப்படலாம் என்று அச்சங்கம் முன்னதாக எச்சரித்திருந்தது.