
வாஷிங்டன், மார்ச்-28- இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் உபரிப் பாகங்கள் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்திருப்பதை உலக வல்லரசுகள் கண்டித்துள்ளன.
வர்த்தக பதட்டங்கள் தீவிரமடைந்து விலை உயர்வுகள் நெருங்கி வருவதால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்க அவை சூளுரைத்துள்ளன.
முக்கிய கார் ஏற்றுமதியாளரான ஜெர்மனி, கடுமையான எதிர்வினையை ஆற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியது.
அமெரிக்கத் தயாரிப்புகள் மீதான வரிகளை உயர்த்துவதே ஐரோப்பிய ஒன்றியத்தின் தக்க பதிலடியாக இருக்க முடியுமென, பிரான்ஸ் நிதியமைச்சரும் கூறினார்.
அதே நேரத்தில் ஜப்பானோ, தன் கைவசமுள்ள அனைத்து தேர்வுகளையும் பரிசீலிக்கப் போவதாக மிரட்டியுள்ளது.
கனடாவின் புதியப் பிரதமர் Mark Carney ஒரு படி மேலே சென்று விட்டார்.
வாஷிங்டனுடனான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளின் “பழைய உறவு” முடிந்து விட்டதாக அவர் கண்டிப்பான தோரணையில் கூறினார்.
இவ்வேளையில் இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனமான Ferrari, அடுத்த வாரம் முதல் அமெரிக்காவிற்கு விற்கப்படும் பல மாடல்களின் விலையை 10% வரை உயர்த்தப் போவதாகக் கூறியுள்ளது.
ஏப்ரல் 3 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு அமலுக்கு வரவுள்ள 25% அமெரிக்க வரிகள், வெளிநாட்டுத் தயாரிப்புக் கார்கள், இலகுரக லாரிகள் மற்றும் வாகன உபரிப் பாகங்களை பாதிக்கின்றன.
இதனால் வாகனச் செலவுகள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, சராசரி கார் விலைகள் 4,000 முதல் 5,300 டாலர் வரை அதிகரிக்கலாமென JPMorgan ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் Toyota, Hyundai, Mercedes போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் சரிவின் முன்னணியில் இருந்ததால் உலகளாவிய பங்குச் சந்தைகளும் சரிந்தன.
நியூ யோர்க் பங்குச் சந்தையில் General Motors, Ford, Stellantis நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சிக் கண்டன.
அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும் அமெரிக்க தொழில்துறைக்குப் புத்துயிர் கொடுப்பதற்கும் ஒரு வழியாகவே வரி விகிதங்களை உயர்த்துவதாக டிரம்ப் தற்காத்துப் பேசுகிறார்.
ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட கார்களை குறிவைப்பது வாஷிங்டனின் நட்பு நாடுகளுடனான உறவுகளை சீர்குலைக்கும் என்பதை டிரம்ப் உண்மையிலேயே அறியவில்லையா அல்லது எல்லாவற்றுக்கும் அவர் தயாராகத்தான் உள்ளாரா என்பது தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன