
கோலாலம்பூர், டிச 2 – ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க (PSIMP ) எனப்படும் ஆசிரியர் இளங்கலை பட்டப்படிப்பு திட்டத்திற்கான விண்ணப்பதாரர்களுக்கு கல்வி அமைச்சு முன்னுரிமை வழங்கியுள்ளது. கல்வி அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்த ஆண்டு வழங்கப்பட்ட 6,300 இடங்களில் ஆசிரியர் இளங்களை பட்டப்படிப்புக்கான விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை துணையமைச்சர் வொங் கா வோ ( Wong Kah Woh ) தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு கல்வி அமைச்சின் கண்காணிப்பில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் 6,300 பேரை உள்ளடக்கிய ஆசிரியர் இளங்கலை பட்டப் படிப்புக்காக 100 விழுக்காடு அதாவது 6,300 மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த குழு மாணவர்கள் பட்டம் பெற்று வெளியே வரும்போது ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை கட்டம் கட்டமாக தீர்க்கப்படும் என்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக இருப்பதாக வொங் தெரிவித்தார். இன்னும் தீர்க்கப்படாத ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னை குறித்து Jelebu நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் ( Jalaludin Alias ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது வொங் இத்தகவலை வெளியிட்டார்.