
கோலாலம்பூர், மார்ச்-5-நாட்டில் 16 வயதுக்குக் கீழ்பட்டவர்கள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனைத் தெரிவித்தார்.
அதற்கு பதிலாக, அந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகள் மூலம் மட்டுமே சமூக ஊடகங்களை பயன்படுத்தலாம் என்றார் அவர்.
“உதாரணத்திற்கு, குழந்தைகள் You Tube உள்ளடக்கங்களைப் பார்க்கலாம். ஆனால் அவர்கள் சொந்தமாகக் கணக்குகளைத் திறக்க முடியாது”
“ஆக, கணக்கை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதே இங்கு விஷயம். குழந்தைகள் நிர்வகிக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். பெற்றோர் நிர்வகிக்கும் கணக்கு என்றால், குறைந்தபட்சம் பிள்ளைகளுடன் யாராவது அந்நியர்கள் தொடர்புகொள்கிறார்களா என்பதை கண்காணிக்க முடியும் என அவர் கூறினார்.
இந்நடவடிக்கை, குழந்தைகளை இணையக் குற்றங்கள், ஆபத்தான உள்ளடக்கங்கள் மற்றும் அந்நியர்களின் தொடர்பு போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக சமூக ஊடகச் சேவை வழங்குநர்களுடன் இணைந்து _regulatory sandbox_ எனப்படும் சிறப்பு ஒழுங்குமுறை பரிசோதனை வழியாக அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் ஃபாஹ்மி தெரிவித்தார்.
தவிர, குழந்தைகள் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய MyKad வாயிலாக வயது சரிபார்ப்பு மற்றும் கடுமையான இணைய பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.



