
கோலாலாம்பூர், ஜூன்-11 – விபத்துக்களைக் கட்டுப்படுத்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்யேக பாதைகளின் பயன்பாட்டை அமுல்படுத்தவும் ஏதுவாக, கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்காணிக்க, போலீஸார் ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு மணி நேர நடவடிக்கையில் 47 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது – அவற்றில் 20 குற்றப் பதிவுகள் மோட்டார் சைக்கிள் பாதையைப் பயன்படுத்தத் தவறியதற்காக வழங்கப்பட்டன.
மோட்டார் சைக்கிள் பாதையைப் பயன்படுத்தாத 16 மோட்டார் சைக்கிளோட்டிகளின் படங்களையும் ட்ரோன்கள் படம் பிடித்தன.
சாலை விபத்துகளில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவை மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் சம்பந்தப்பட்டவை என்பதால், மோட்டார் சைக்கிள்களை இலக்காகக் கொண்டு இன்றைய நடவடிக்கை நடத்தப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் ஷாருல் நிசாம் ஜாஃபார் அதனைத் தெரிவித்தார்.
அமுலாக்க நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதை உணர்த்தவே புக்கிட் அமான் வான் படையின் ட்ரோன் பிரிவுடன் இணைந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஷாருல் நிசாம் விளக்கினார்.
வரும் காலங்களில் குறிப்பாக காலையில் உச்ச நேரங்களின் போதும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.