
கோலாலம்பூர், ஏப்ரல்-26 – கோலாலம்பூரில் கைதான போது போலீஸ்காரரின் இடது காதை நைஜீரிய ஆடவன் கடித்துத் துப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினான்.
நேற்று காலை மெட்ரோ பிரிமா, ஜாலான் கெப்போங்கில் போலீஸ் MPV ரோந்து வாகனத்தில் அவனை ஏற்ற முயன்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
முன்னதாக அங்குள்ள ஒரு கிளினிக்கில் பிரச்னை செய்ததால் செந்தூல் போலீஸ் நிலையத்திற்கு அவ்வாடவனை கொண்டுச் செல்ல போலீஸார் முடிவுச் செய்தனர்.
எனினும் போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்ற போது அவன் முரண்டு பிடித்தான்.
கைகள் பின்பக்கமாக விலங்கிடப்பட்டிருந்தவன் திடீரென போலீஸ்காரரின் இடது காதைக் கடிக்க, அதில் ஒரு பகுதித் துண்டானது.
இதையடுத்து சிகிச்சைக்காக அந்த போலீஸ்காரர் உடனடியாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
படுகாயம் விளைவித்தது மற்றும் கடமையைச் செய்ய விடாமல் அரசு ஊழியர்களைத் தடுத்ததற்காக, 38 வயது சந்தேக நபர், விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டான்.
அவன் முறையான பயணப் பத்திரங்கள் இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெறுகிறது.