
கோலாலம்பூர், டிச 3 – உணவு விநியோகம், பொருள் பட்டுவாடா உட்பட கிக் தொழில் துறையில் ஈடுபடுவோரின் நலனை பாதுகாக்கவும் அவர்களின்
பங்கேற்பு நிலைத்தன்மையாவும் இருக்கவும் தனி ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென மலேசிய உற்பத்தியாளர் கூட்டமைப்பான FMM மின் தொழிலாளர் மூலதாரக் குழுவின் தலைவர் டத்தோ நாதன் கே.சுப்பையா வலியுறுத்தினார். போக்குவரத்து, டெலிவரி சேவைகள் மற்றும் சுயதொழில் போன்ற துறைகளில் நூற்றுக்கணக்கான மக்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தி, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக கிக் தொழில்துறை வளர்ந்துள்ளது. தற்போது இருக்கும் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு இல்லாததால், கிக் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே கிக் தொழிலாளர்கள் ஆணையத்தை உருவாக்குவதில்
மனிதவள அமைச்சு , தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ், கிக் தொழிலாளர்களின் ஆணையம் இருக்க வேண்டும். கிக் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றியபோதிலும் இ.பி.எப் மற்றும் சொக்சோ போன்ற சமூக பாதுகாப்பு வசதியின்றி இருக்கின்றனர். இதனால் குறைந்தபட்ச ஊதியம், காப்பீடு மற்றும் வேலைசம்பந்தமான சலுகைகளை பெற முடியாத சூழ்நிலைக்கும் அவர்கள் உள்ளாகியுள்ளனர். சிங்கப்பூர், தாய்லாந்து , இந்தோனேசியா போன்ற ஆசியான் நாடுகள் கிக் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அந்த அணுகுமுறையை மலேசியாவும் பின்பற்ற வேண்டும் என நாதன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.