
கோலாலம்பூர், நவம்பர்-5 – இஸ்லாத்தை சிறுமைப்படுத்திப் பேசும் வீடியோவை வெளியிட்டு வைரலாகியுள்ள ஆடவரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பெற்று வரும் அவரிடம் விரைவிலேயே வாக்குமூலம் பெறப்படுமென கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா தெரிவித்தார்.
அவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய டத்தோ ருஸ்டி, குற்றவியல் சட்டம், தகவல்-பல்லூடகச் சட்டம், சிறு சிறு குற்றங்களுக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
முன்னதாக Tan Chong Ren@Tan Speaker Corner என்ற முகநால் பக்கத்தில் அவ்வீடியோ பதிவேற்றம் கண்டு வைரலானது.
அதில் காருக்குள் அமர்ந்திருக்கும் ஆடவர் இஸ்லாத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மக்களிடையே வீண் சர்ச்சை உண்டாவதைத் தவிர்க்க, அந்த வீடியோவை இனியும் பகிர வேண்டாமென பொது மக்களைப் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.