
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29,ரெட்டா’ (Reta) அல்லது Retatrutide என்ற பெயரில் இணையத்தில் விற்கப்படும் உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் ஊசிகளைப் பொது மக்கள் வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
Reta இன்னும் இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனையிலேயே உள்ள ஒரு மருந்தாகும்.
எனவே, மலேசியா உட்பட உலகின் எந்தவோர் ஒழுங்குமுறை ஆணையத்தாலும் இது பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்படவில்லை என KKM தெளிவுபடுத்தியுள்ளது.
மருத்துவரின் முறையான பரிந்துரை மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத மருந்துகளைப் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இணைய வணிகத் தளங்களில் சட்டவிரோதமாக விளம்பரப்படுத்தப்பட்ட 209 எடைக் குறைப்பு விளம்பரங்களை அமுலாக்கப்பிரிவு அதிரடியாக நீக்கியுள்ளது.
பொது மக்கள் எந்தவொரு மருந்துப் பொருளையும் வாங்குவதற்கு முன், தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான NPRA இணையதளத்திலோ அல்லது MyUBAT செயலியிலோ அதன் பதிவு நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



