
நிபோங் தெபால், ஜன 14 – பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கொள்கலன் லோரியின் பின்புறம் மோதியதில் 23 பேர் காயம் அடைந்தனர். இன்று விடியற்காலை மணி 4.16 க்கு வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 157.8 ஆவது கிலோமீட்டரில் சுங்கை பக்காப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தின்போது அந்த பஸ்ஸில் 26 பயணிகள் பயணம் செய்தனர். காயம் அடைந்தவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவிலும் 9 பேர் மஞ்சள் மண்டல பிரிவிலும் , 12 பேர் பச்சை மண்டலப் பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு
சுங்கை பக்காப் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்புப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர்கள் உடனடியாக காயமடைந்த பஸ் பயணிகளை வெளியேற்றியதாக தீயணைப்பு அதிகாரி சைபுல் பஹாரி (Saiful Bahari) தெரிவித்தார்.
எனினும் இந்த விபத்தில் எவரும் பஸ்ஸில் சிக்கிக்கொள்ளவில்லை. காயம் அடைந்த அனைவரும் சுங்கை பக்காப் மற்றும் செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்தைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.