
அபு தாபி, ஜனவரி-15 – மலேசியாவில் திட்டமிடப்பட்ட பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை வெற்றியடையச் செய்யும் கடப்பாட்டை, அபு தாபி முதலீட்டு அதிகாரத் தரப்பான ADIA உறுதிச் செய்துள்ளது.
UAE எனப்படும் ஐக்கிய அரசு சிற்றரசுக்கு 3 நாள் பணி நிமித்தப் பயணமாக சென்றுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அந்த உத்தரவாதம் வழங்கப்பட்டது.
ADIA-வின் இந்த கடப்பாட்டின் மூலம், சுகாதாரப் பரமாரிப்பு, விமான நிலைய செயல்பாடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நீண்ட கால முதலீட்டைக் கவர்ந்திழுக்க முடியுமென பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மலேசியாவுக்கும் ADIA-க்கும் இடையிலான இந்த வலுவான ஒத்துழைப்பானது, நாட்டின் நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதார வளர்ச்சி மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
முதலீட்டாளர்களுடன் தோழமைப் போக்கைக் கடைபிடிக்கும் மலேசிய அரசாங்கத்தின் கொள்கைகள், முதலீட்டாட்டாளர்களைக் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் கிடைக்கும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதில், மற்ற உலக முதலீட்டு நிறுவனங்களின் குரலாகவும் ADIA இருப்பதாக பிரதமர் வருணித்தார்.
1 டிரில்லியன் டாலரைத் தாண்டும் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்கார நிதியங்களில் ஒன்றாக விளங்கும் ADIA, MAHB நிறுவனத்தின் உருமாற்றத் திட்டம் உட்பட பல்வேறு துறைகளில் நீண்ட காலமாகவே மலேசியாவில் முதலீடு செய்து வருகிறது.