Latestஉலகம்

மலேசியாவுக்குக் கடத்த முயன்ற 21.8 கிலோ தங்கம் பறிமுதல்

ஜகார்த்தா, நவம்பர் 17 – இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்குக் கடத்த முயன்ற 21.8 கிலோகிராம் தங்கத்தை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தெற்கு கலிமந்தான் மாநிலம், பஞ்சர்பாருவில் உள்ள சியாம்சுதீன் நூர் சர்வதேச விமான நிலையத்தில் (Lapangan Terbang Antarabangsa Syamsudin Noor), ஒரே வாரத்திற்குள் இடம்பெற்ற இரண்டு கடத்தல் முயற்சிகளை அதிகாரிகள் முறியடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 2.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் நடமாட்டம் குறித்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், குறிப்பாக மலேசியாவுக்குப் பயணம் செய்யத் தயாரானவர்களைக் கண்காணித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தங்கத்தை மறைப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட ஆடைகள், தனிப்பட்ட உடைமைகளுக்கு இடையிலான மறைவிடங்கள் மற்றும் போலி ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகளைச் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், இந்தோனேசியாவில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 405.1 கிலோகிராம் தங்கத்தைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட 131 முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிகரிப்பாகும்.

தங்கக் கடத்தலைத் தடுப்பதற்கும், உள்நாட்டுத் தொழில்துறைக்கான தங்க விநியோகத்தை உறுதி செய்வதற்கும் இந்தோனேசிய அரசு ஏற்றுமதிக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!