Latestமலேசியா

அரசாங்க குத்தகைகளை எடுப்பதற்கு 4 மனைவிகளை சிலர் திருமணம் செய்கின்றனர்

கோலாலம்பூர். டிச 28 – சிலர் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்க நான்கு மனைவிகளை திருமணம் செய்து டெண்டர் மூலம் அரசாங்க குத்தகைகளை எடுக்கின்றனர் என்று MyCC எனும் மலேசிய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.

500க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அந்த அரசு ஆணையம் கண்காணித்து வருகிறது. அரசாங்க டெண்டர்களில் பங்கெடுத்து வர்த்தக சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கண்காணிப்பு பட்டியலில் உள்ளதாக MyCC கூறியுள்ளது. நிறுவன உரிமையாளர் தனது சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்ப நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்வதும், தனது மனைவிகள் மற்றும் உறவினர்களின் பெயர்களை பினாமிகளாக பயன்படுத்துவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் டெண்டர்களை தங்கள் வசமே வைத்துக் கொள்ள முயற்சிப்பது கண்டறியப்பட்டதாக MyCC தலைமை நிர்வாக அதிகாரி இஸ்கண்டார் இஸ்மாயில் கூறியதாக மலாய் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டது.

சதி செய்து பல டெண்டர்களை தங்களுக்காகவே சமர்பிப்பது அவர்களின் செயல்பாடாக உள்ளது. உதாரணமாக, 50 நிறுவனங்கள் ஒரே நேரத்தில் டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புகின்றன. அதைத் தொடர்ந்து, அவர்கள் தேவையான படிவங்களை ஒன்றாக நிரப்புவார்கள் மற்றும் தேவையான தளங்களுக்கும் செல்வார்கள். அவர்களுக்குள்ளாகவே டெண்டர் விலையை பேசி ஒப்புக்கொள்வதன் மூலமும் டெண்டர் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்து பின்னர் அரசாங்க டெண்டர் அவர்களின் ‘சொத்து’ போல கருதி பங்கெடுப்பார்கள் என்று இஸ்கண்டார் இஸ்மாயில் கூறினார்.

நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்வதும், நிறுவன உரிமையாளர்கள் தங்கள் வர்த்தக சாம்ராஜ்யங்களை உருவாக்க பயன்படுத்தும் சதி முறைகளில் ஒன்று என்று இஸ்கண்டார் இஸ்மாயில் கூறினார்.

“ஏ நிறுவனம் முதல் மாமனாரால் நடத்தப்படும், பி நிறுவனம் இன்னொரு மாமனாரால் நடத்தப்படும், நிறுவனம் சி மைத்துனருக்குச் சொந்தமானதாக இருக்கும், டி நிறுவனம் அவர்களின் மருமகனுக்குச் சொந்தமானதாக இருக்கும். மற்ற நிறுவனங்களை மனைவிகள் நடத்துவார்கள். இந்த வழியில், அவர்கள் தங்களுடைய 50 நிறுவனங்களே ஒன்றாக டெண்டர் எடுக்கும் ஒரு பேரரசை உருவாக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

தரமான சேவைகளை வழங்கக்கூடிய சிறந்த நிறுவனத்தைப் பெறுவதற்கு அரசாங்கம் தகுதிவாய்ந்த தரப்பினருக்கு டெண்டர்களைத் திறக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். எனினும் சில சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்கள், அவர்கன் முன்மொழியும் குத்தகைக்கான தொகையே சிறந்தது என்பது போன்ற ஒரு மாயையை மட்டுமே உருவாக்கி, அதன் மூலம் உண்மையிலேயே திறமையான மற்ற நிறுவனங்களின் வாய்ப்புகளை பாதிக்கச் செய்கின்றன என இஸ்கண்டார் இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!