
கோலாலம்பூர், நவம்பர்-5 – எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது போல், 94 மில்லியன் ரிங்கிட் பணம் கண்டெடுக்கப்பட்டதில் தமக்கு சம்பந்தமிருப்பதாக கூறப்படுவதை, மனிதவள முன்னாள் அமைச்சர் வி.சிவகுமார் மறுத்துள்ளார்.
அதுவோர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு மட்டுமல்ல, தன் பெயருக்கும் தான் சார்ந்த கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் தாக்குதல் என, பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
தமது பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லையென்றாலும், பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹஷிம் முன்வைத்த அக்குற்றச்சாட்டு தம்மையே குறிப்பதாக சிவகுமார் கூறினார்.
இது உண்மையிலேயே தம்மை மிகவும் புண்படுத்தியிருப்பதாக, DAP-யின் துணைப் பொதுச் செயலாளருமான அவர் சொன்னார்.
இந்நிலையில், அவாங் ஹஷிமின் கூற்றை நிராகரித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உண்மை நிலவரத்தை விளக்கியிருப்பதற்கு நன்றி கூறுவதாகவும் சிவகுமார் கூறினார்.
திங்கட்கிழமை மக்களவையில் பேசிய டத்தோ அவாங் ஹஷிம், DAP-யைச் சேர்ந்த மனிதவள முன்னாள் அமைச்சர் ஒருவரது வீட்டில் 94 மில்லியன் ரிங்கிட் நிதி கைப்பற்றப்பட்டதாகக் கூறியிருந்தார்.
எனினும், அப்படியொரு தகவல் எதனையும் MACC-யோ அல்லது அதன் தலைமை ஆணையரோ வெளியிடவில்லை என, MACC அறிக்கையொன்றில் தெளிவுப்படுத்தியிருந்தது.