
பட்டவொர்த், ஆகஸ்ட்-10 – பினாங்கு பட்டவொர்த்தில் பேரங்காடியில் திருடி விட்டு தப்பியோடும் முயற்சியில், வெளிநாட்டு ஆடவன் கத்தி முனையில் ஒரு குழந்தையை பிடித்து இழுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மதியம் வாக்கில் சில கடலுணவுகளை எடுத்த அந்த வியட்நாமிய ஆடவன், அவற்றின் எடையை நிறுத்து விட்டு, பணம் செலுத்தாமல் ஓட முயன்றான்.
பேரங்காடி மேலாளர் அவனை பிடித்த போதும், கைகளைத் தள்ளி விட்டு அவன் தப்பினான்.
மீண்டும் அவனைப் பிடிக்க முயன்ற போது, அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவரின் 11 மாதக் குழந்தையை கத்தி முனையில் அவன் பிடித்து இழுத்தான்.
இதனால், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கும், உதவ ஓடி வந்த பொது மக்களுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
எனினும் முரண்டு பிடித்த அவ்வாடவான் ஒருவழியாக பிடிபட்டு போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான்.
விசாரணைக்காக இன்று முதல் அவன் தடுத்து வைக்கப்படுவான் என செபராங் பிறை உத்தாரா போலீஸ் கூறியது.
அவ்வாடவன் பிடித்து இழுத்ததில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, முதுக்குப் பகுதியில் இலேசான காயத் தளும்புகள் ஏற்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டது.