
கோலாலம்பூர், அக்-12–மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) தலைமை இயக்குநர் Shuhaily Zainனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு காவல் வீரர்களுக்கு குற்றக் கும்பல்கள் நிதியளிக்கவில்லை. அவ்வாறு கூறப்படுவதை அவர்களின் வழக்கறிஞர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
அத்தகையக் குற்றச்சாட்டுகளைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை தங்களது கட்சிக்காரர்களுக்கு இருக்கிறது. அக்குற்றச்சாட்டுகளில் தங்களது சட்ட நிறுவனமும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக Kamal Hisham & Associates’ சட்ட நிறுவனம் தெரிவித்திருப்பதாக ‘Utusan Malaysia’ செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சு சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியதுதான். என்றாலும் அது முழுமையான உரிமையல்ல. பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் மீது குற்றவியல் அவதூறு தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அது நினைவுறுத்தியது.
KLIA முனையம் 1-இல் Shuhaily ஒருவரிடம் நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து அச்சம்பவம் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது. அக்காட்சிகள் உண்மையானவை என்பதை AKPS உறுதிப்படுத்தியதுடன், Bahrain F1GPக்கு முன்னதாக விமான நிலைய ஏற்பாடுகளை Shuhaily ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தது.
இதனிடையே, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323-இன் கீழ் Bukit Aman குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு உதவும் வகையில் இரு காவல் வீரர்களும் அக்டோபர் 10ஆம் தேதி கூடுதல் புகார்களைக் கொடுத்ததாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அரசு ஊழியரின் கடமையைத் தடுத்தல், அவமதிக்கும் நோக்கில் பலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் பரிசீலிக்கப்படலாம். காவல் துறை விசாரணையை மேற்கொள்ளட்டும். சட்டத் துறை அலுவலகம் அச்சம்பவத்தை மதிப்பீடு செய்யட்டும் என்றும் அவர்கள் கூறினர்.



