
மும்பை, செப்டம்பர்-13 – இந்தியாவின் குஜராத்திலிருந்து மும்பை புறப்பட்ட SpiceJet விமானத்தில் ஒரு டயர் ஓடுபாதையிலேயே கழன்றிய சம்பவம் நடுவானில் தெரிய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
75 பயணிகளுடன் மும்பை கிளம்பிய போதே, விமானத்தின் மூக்குப்பகுதியில் உள்ள வெளிப்புற டயர் கழன்றுள்ளது; ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை.
பின்னர் விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரம் மூலமாக விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
என்றாலும் விமானம் மும்பைக்கான பயணத்தைத் தொடர்ந்தது.
தரையிறங்க 20 நிமிடங்கள் இருந்த போதே, ஒரு சக்கரம் இல்லாதது குறித்து பயணிகளிடம் விமானி தெரிவித்தார்.
இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
எனினும், மும்பை விமான நிலையத்தில் முன்னேற்பாடாக அவசரகால நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, ஒரு சக்கரம் இல்லாமலேயே விமானத்தை சாதுர்யமாக விமானி தரையிறக்கினார்.
பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஒரு சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கிய வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
அச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.



