
சுபாங் ஜெயா, ஏப் 10 – புத்ரா ஹைட்ஸில் அண்மையில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்துடன் ஒரு மரணத்தை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவும் வைரல் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியிருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
அடிப்படையற்ற அந்த குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ் துறைக்கு மாவட்ட சுகாதார மையத்திலிருந்து அறிக்கை கிடைத்ததாகவும், அவை ஆதாரமற்றவை என்று அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 500ஆவது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 விதியின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உசேய்ன் தெரிவித்தார்.
சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் இறப்பு ஏற்பட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் குறித்து சுகாதார அமைச்சு போலீசில் புகார் செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மலேசிய பல்லூடகம் மற்றும் தொடர்பு ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த தீ விபத்தில் மரணம் ஏற்பட்டது தொடர்பில் எந்தவொரு பொது மற்றும் தனியார் மருத்துவமனையிடமிருந்து அறிக்கை எதனையும் பெறவில்லையென சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.