விபத்துக்குள்ளான Jeju Air விமானத்தின் இயந்திரங்களில் வாத்துகளின் மரபணு கண்டறிவு

சியோல், ஜனவரி-27, கடந்த மாதம் தென் கொரியாவில் விபத்துக்குள்ளான Jeju Air விமானத்தின் இரண்டு இயந்திரங்களிலும் வாத்து எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விபத்துக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு தென் கொரிய அதிகாரிகள் வெளியிட்ட 6 பக்க அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டது.
அந்த போயிங் 737-800 ஜெட் விமானத்தின் இரண்டு இயந்திரங்களிலும் Baikal Teals எனும் ஒரு வகை புலம் பெயர்ந்த வாத்துகளின் மரபணு கண்டறியப்பட்டது.
அவை குளிர்காலத்தின் போது தென் கொரியாவுக்கு பெரும் கூட்டமாக பறந்து வருபவையாகும்.
எனினும் இந்தத் தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கை சில முக்கியக் கேள்விகளுக்கு பதில் தரவில்லை.
குறிப்பாக, தரையிறங்கும் கியரைப் பயன்படுத்தாமல் விமானம் தரையிறங்கியது ஏன்? விமானத்தின் இறுதி நான்கு நிமிடங்களில் விமானத் தரவுப் பதிவுக் கருவிகள் பதிவுச் செய்வதை நிறுத்தியது ஏன் என்பதற்கு பதில் இல்லை.
முன்னதாக, தென் கொரிய வரலாற்றிலேயே நிகழ்ந்த மோசமான் விமான விபத்தாக, டிசம்பர் 29-ல் மூவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானம் வெடித்துச் சிதறியதில், 179 பயணிகள் கொல்லப்பட்டனர்.
அதில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.