
கோலாலாம்பூர், ஜூலை-20-கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏறக்குறைய 4 மில்லியன் ரிங்கிட் செலவில், இந்த ஆலயம் தற்போது முழுமையான கருங்கல் கோயிலாக மாற்றியமைக்கப்பட்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
இதற்கான பூசைகள் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குகின்றன.
முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு வரை, பக்தர்கள் தங்களின் தங்கம், வெள்ளி மற்றும் நவரத்தினக் காணிக்கைகளை மூலஸ்தானத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பக்தர்களுக்கான எண்ணெய் சாத்துதல் நடைபெறும்.
சிகர நிகழ்ச்சியான சுவர்ண பந்தன மகா கும்பாபிஷேகம், ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 10.40 மணிக்குள்ளான சுப வேளையில் நடைபெறும்.
அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு மேல் ஸ்ரீ கணேசப் பெருமானின் தங்க இரத வீதி உலாவும் நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



