
பேங்கோக், ஜூலை-1 – தாய்லாந்து பெண் பிரதமர் பெட்டோங்டார்ன் ஷினாவாட்டை, அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ளது.
கம்போடியாவுடனான இராஜதந்திர மோதலில் அவரது நடத்தை குறித்து விசாரணைத் தொடங்கிய நிலையில், இந்த அதிரடித் தீர்ப்பு வந்துள்ளது.
ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பே ஆட்சிக்கு வந்தவரான பெட்டோங்டார்ன், கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையின் போது நெறிமுறைகளை மீறினாரா என்பதை அரசியலமைப்பு நீதிமன்றம் ஆராயும் வரை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான பெட்டோங்டார்னுக்கு, அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான தாக்சின் ஷினாவாட், அரச குடும்ப அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதே நாளில் இந்த இந்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
எல்லைப் பதட்டங்களைப் பற்றி விவாதிக்க கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னை தொலைப்பேசியில் பெட்டோங்டார்ன் அழைத்துப் பேசிய போது அனைத்தும் தொடங்கின.
வயதில் பெரியவரான ஹூன் சென்னை “மாமா” என்றழைத்ததோடு, தாய்லாந்து இராணுவத் தளபதியை தனது “எதிரி” என்று பெட்டோங்டார்ன் குறிப்பிட்டார்; அந்த ஒளிநாடா கசிந்ததால் இன்று அதன் விளைவுகளை அவர் சந்திக்கிறார்.
அவர் கம்போடியாவுக்கு அடிமையாகி, தாய்லாந்து இராணுவத்தை சிறுமைப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கூட்டணி அரசாங்கத்திலிருந்து முக்கியக் கட்சிகள் வெளியேறின; அவருக்கெதிரான சாலை ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.