
பிரயாக்ராஜ், ஜனவரி-22 – இந்தியா, உத்தர பிரதேசத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்கும் மகா கும்பமேளாவில், கடந்த சில நாட்களாகவே தனது அழகால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் இளம்பெண் ஒருவர்.
மாநிறத்தில், பார்த்தவுடன் காந்தமாய் ஈர்க்கும் கண்ணழகு, நேர்த்தியான மூக்கு என கலையாக இருப்பதால் தான் என்னவோ, அவரின் பெயரும் மோனலிசா என பொருத்தமாக அமைந்து விட்டது.
கும்பமேளாவில் குடும்பத்தோடு தங்கி ருத்ராட்ச மாலையை விற்கும் மோனலிசா, பக்தர்கள் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
மோனலிசாவின் அழகில் மயங்கி பலர், ஆன்மீக இடமென்றும் பாராமல் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வரிசைகட்டி நிற்கின்றனர்.
ஆனால், புகைப்படம் எடுப்பதாகக் கூறிக் கொண்டு அவரிடம் சிலர் அத்துமீறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மோனலிசாவை சுற்றி வரும் கூட்டத்திலிருந்து அவரைப் பாதுகாக்க படாத பாடு பட்டது.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சொந்த ஊருக்கே மகளை அவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.
முன்னதாக, ஒரே நாளில் இணையத்தைக் கலக்கியது குறித்து பேசியிருந்த மோனலிசா, எல்லாரும் தன்னுடன் புகைப்படம் எடுத்துச் செல்கிறார்களே தவிர, தனக்கு வாழ்வாதாரமான ருத்ராட்ச மாலையை ஒருவரும் வாங்குவதில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டிருந்தார்.