
சிலி, ஜனவரி 20 – Chile-யின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயினால் இதுவரை குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவி, 30-க்கும் மேற்பட்ட தீப்பரவல்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், சில பகுதிகளில் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், உயர் வெப்பநிலை தொடரும் என்பதால் புதிய தீப்பரவல்கள் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதென அவர் எச்சரித்தார். சில பகுதிகளில் வெப்பநிலை 37 செல்சியஸ் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான உயிரிழப்புகள் Penco நகரில் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 325 வீடுகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் தீ வேகமாகப் பரவியதால் மக்களுக்கு தப்பிக்க குறைந்த நேரமே கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து Nuble மற்றும் Bio Bio பகுதிகளில் இதுவரை 35,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயால் அழிந்துள்ளது.
தொடர்ந்து நீடிக்கும் அதிக வெப்பநிலை, மற்றும் பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற வெப்பஅலைகள் அர்ஜென்டினாவிலும் நீடித்து, அங்கு 15,000 ஹெக்டருக்கும் மேற்பட்ட நிலம் காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளது.



