
கோலாலாம்பூர், அக்டோபர்-15,
சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள், BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்நடவடிக்கை, சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது அங்கு தினசரி பயணம் செய்யும் மலேசியர்களுக்கான வசதியை எளிதாக்கும்.
இதற்காக www.BUDI95lesenSG.jpj.gov.my என்ற பிரத்யேக அகப்பக்கத்தை சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ நாளை திறக்கவிருக்கிறது.
14 நாட்களுக்குப் பிறகு www.budi95.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் அவர்கள் தங்கள் தகுதி நிலையைச் சரிபார்க்கலாம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனைக்காகவும் ஒப்புதலுக்காகவும் நிதி அமைச்சிடம் அனுப்பப்படும்.
தகுதிப் பெற, விண்ணப்பதாரர்கள் மலேசிய குடிமக்களாக இருக்க வேண்டும், செல்லுபடியாகும் சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் மற்றும் அக்குடியரசில் செல்லுபடியாகும் வேலை பெர்மிட்டைப் பெற்றிருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் இனியும் வேலை செய்யாத மலேசியர்கள், ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி தங்களின் சிங்கப்பூர் உரிமத்தை இரத்து செய்த பிறகு, மலேசிய ஓட்டுநர் உரிமத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
எது எப்படி இருப்பினும், BUDI95 மானியம் மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே என்பதை அமைச்சர் மறு உறுதிபடுத்தினார்.