Latestமலேசியா

குவாந்தான் KK Mart கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு; ஏமாற்றமும் கடும் கண்டனமும் தெரிவித்த பஹாங் சுல்தான்

குவாந்தான், மார்ச் 31 – குவாந்தானில் KK Super Mart கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை மேன்மைத் தங்கிய பஹாங் சுல்தான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அத்தகையச் செயல் சட்டத்திட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல; அமைதியைப் போதிக்கும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் எதிரானது என அல் சுல்தான் அப்துல்லா வருத்தமும் ஏமாற்றமும் தெரிவித்தார்.

எனவே அச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு போலீசை அறிவுறுத்திய அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் பணித்தார்.

மாநில மக்கள் இது போன்ற இனவாத-மதவாத உணர்ச்சிகளைத் தூண்டும் சிந்தனைகளுக்கு ஆட்படக்கூடாது என்பதோடு, அதனை விதைக்க முயலுவோருக்குத் துணைப் போகவும் கூடாது.

இல்லையேல் நீண்ட காலமாக நாம் கட்டிக் காத்து வரும் தேசிய ஒற்றுமையும் அமைதியும் சீர்குலைந்து விடும் என அல் சுல்தான் அப்துல்லா எச்சரித்தார்.

Allah வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சர்ச்சை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அனைத்து சாராரும் மதிக்க வேண்டும்; அதை விடுத்து, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வரம்பு மீறக் கூடாது என பஹாங் சுல்தான் நினைவுறுத்தினார்.

இவ்வேளையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

அமைதியான நாட்டில் வன்முறைகளைத் தூண்டும் இது போன்ற செயல்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

சுங்கை ஈசாப்பில் உள்ள KK Super Mart-டில் சனிக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அக்கடையின் வாசலில் இருந்த கார்ப்பெட்டில் தீ ஏற்பட்டது.

சம்பவத்தின் போது கடையினுள் இருந்த 2 பணியாளர்கள் காயமேதும் இன்றி தப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!