
கோலாலம்பூர், ஜனவரி-13 – BAP எனப்படும் மாணவர்களுக்கான 150 ரிங்கிட் பள்ளித் தொடக்க உதவி நிதி, பெற்றோர்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும்.
பள்ளிக் கட்டணம் அல்லது மற்ற பயன்பாட்டுக்கு என்ற பெயரில் அதில் பிடித்தம் செய்யக் கூடாது என, பள்ளி நிர்வாகங்கள் நினைவுறுத்தப்பட்டுள்ளன.
அந்நிதி மாணவர்களின் உரிமையாகும்; அது முழுமையாக அவர்களின் பள்ளிச் செலவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
உத்தரவை மீறி, அத்தொகையில் பிடித்தம் செய்யப்பட்டால், பெற்றோர்கள் அமைச்சிடம் புகாரளிக்கலாமென்றார் அவர்.
2024/2025 கல்வியாண்டில் முதலாம் வகுப்பு முதல் நான்காம் படிவம் வரையில் பயிலும் மாணவர்களுக்கான அந்த 150 ரிங்கிட் உதவி நிதி, இன்று தொடங்கி விநியோகிக்கப்படுகிறது.
அதே சமயம், 2025/2026 புதியக் கல்வித் தவணையில் முதலாமாண்டில் காலடி வைக்கும் மாணவர்களுக்கும், இரண்டாம் பருவத்தில் நுழையும் 6-ம் படிவ மாணவர்களுக்கும் பிப்ரவரி 16 தொடங்கி அந்நிதி விநியோகம் செய்யப்படும்.
ஆறாம் படிவத்தில் காலடி வைக்கும் மாணவர்கள் வரும் ஜூலை 1 முதல் அந்த உதவி நிதியைப் பெறத் தொடங்குவர்.
இந்தப் பள்ளித் தொடக்க உதவி நிதி இவ்வாண்டு முதன் முறையாக ஆறாம் படிவ மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.