
ஜெனிவா, பிப்ரவரி-28 – Mpox எனப்படும் குரங்கம்மை இன்னமும் உலகலாய சுகாதார அவசர நிலையாகவே நீடிப்பதாக, உலக சுகாதார நிறுவனமான WHO அறிவித்துள்ளது.
உலகளவில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொது சுகாதார அவசர நிலைக்கான வரையறைகளை அது இன்னமும் பூர்த்திச் செய்கிறது.
நோய் பரவலின் மைய இடமான கோங்கோ ஜனநாயகக் குடியரசில் நிலவி வரும் வன்முறைகளால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தவிர, போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததும் WHO-வின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க கண்டம் குறிப்பாக கோங்கோ நாட்டில் வேகமாகப் பரவத் தொடங்கியதால், Mpox உலக சுகாதார அவசர நிலையாக கடந்தாண்டு ஆகஸ்ட் 14-ல் முதன் முறையாக அறிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு மட்டும் 13,000 நோய் தொற்று சம்பவங்களும் 43 மரணங்களும் கோங்கோவில் பதிவாகின.
இவ்வாண்டு இதுவரையில் 2,000 நோய் தொற்றுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைக்கு உலகளவில் 15 நாடுகளில் இந்நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Mpox குரங்கம்மையானது, கிருமி பீடிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியதாகும்; நெருங்கியத் தொடர்பின் வாயிலாக மனிதர்களுக்கு இடையிலும் அத்தொற்று பரவி வருகிறது